முகமது ஷமி பண்ணை இல்லத்தின் முன்...!! திடீரென குவிந்த ரசிகர்களால் பரபரப்பு

ஷமி அவருடைய இன்ஸ்டாகிராமில் இதுபற்றி பகிர்ந்துள்ள வீடியோவுக்கு 4.3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

Update: 2023-12-11 14:35 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் முதல் சில போட்டிகளை அவர் தவற விட்டாலும், தொடரின் முடிவில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்து, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

மொத்தம் 24 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், அதன்பின் புகழின் உச்சிக்கு சென்றார். உத்தர பிரதேசத்தில் இருந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை பயணம் தொடங்கியது. பின்னர் வங்காள அணிக்காக தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றார்.

அதன்பின்னர், இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். இந்நிலையில், அவருடைய சொந்த ஊரில் உள்ள பண்ணை வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவருடன் ஒன்றாக புகைப்படம் எடுப்பதற்காக வந்த அவர்களை வரிசையாக நிற்க வைத்து பின்னர், உள்ளே செல்ல பாதுகாவலர்கள் அனுமதித்தனர். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

இதுபற்றிய வீடியோ ஒன்றையும் ஷமி அவருடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதற்கு 4.3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

சமீபத்தில் ஷமி அளித்த பேட்டி ஒன்றில், கடந்த காலங்களில் பைக்குகள், கார்கள், டிராக்டர்கள், பஸ் மற்றும் லாரிகள் ஆகியவற்றை ஓட்டியிருக்கிறேன். பயணம் செய்வது மற்றும் மீன் பிடித்தல் எனக்கு பிடிக்கும். வாகனங்கள் நிறைய ஓட்டுவேன். பைக் மற்றும் கார்கள் ஓட்டுவது பிடிக்கும். நெடுஞ்சாலைகளில் பைக் ஓட்டுவேன். இந்தியாவுக்கு விளையாட தொடங்கிய பின்னர், பைக் ஓட்டுவது குறைந்து, பின்னர் அதனை நிறுத்தி விட்டேன்.

சில சமயங்களில் என்னுடைய தாயாரை சந்திக்க கிராமத்திற்கு செல்வேன் என தெரிவித்து உள்ளார். என்னுடைய பள்ளி நண்பர்களில் ஒருவரின் வீட்டில் லாரி இருந்தது. அதனை ஓட்டும்படி என்னிடம் கூறினான். அப்போது நான் சிறுவனாக இருந்தேன். அதனை நான் ஓட்டினேன்.

அதன்பின் ஒரு முறை எங்களுடைய டிராக்டரை ஓட்டி சென்று குளத்தில் விட்டேன். இதுபற்றி அறிந்த என்னுடைய தந்தை ஆவேசத்தில் திட்டி விட்டார் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்