டி20 உலகக்கோப்பையை வென்ற முகமது சிராஜுக்கு வீடு மற்றும் அரசுப் பணி: தெலங்கானா முதல் - மந்திரி உறுதி
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் முகமது சிராஜ் இடம்பெற்றிருந்தார்.
ஐதராபாத்,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பிறகு மும்பை சென்ற இந்திய அணி வீரர்கள் மரைன் டிரைவ் பகுதியிலிருந்து வான்கடே மைதானம் வரையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றி பேரணி சென்றனர்.
கடைசியாக வான்கடே ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன் பிறகு டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இவர்களுக்கு மகாராஷ்டிரா மாநில அரசு ரூ.11 கோடி பரிசுத் தொகை அறிவித்தது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஐதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான சேர்ந்த முகமது சிராஜை, தெலங்கானா முதல் - மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும் மாநில அரசின் சார்பில் சிராஜுக்கு ஐதராபாத்தில் ஒரு வீடும், அரசுப் பணியும் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.