டெல்லி அணிக்காக அதிவேக அரைசதம் - சாதனை படைத்த ஜேக் ப்ரேசர் மெக்குர்க்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.
டெல்லி,
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் அடித்தார்.
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் டெல்லி தரப்பில் அதிரடியாக ஆடிய மெக்குர்க் 18 பந்தில் 65 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
அவர் இந்த ஆட்டத்தில் 15 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் டெல்லி அணிக்காக (பந்துகள் அடிப்படையில்) அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார். மேலும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.
டெல்லி அணிக்காக அதிவேக அரைசதம்;
ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் - 15 பந்துகள்
கிறிஸ் மோரிஸ் - 17 பந்துகள்
ரிஷப் பண்ட் - 18 பந்துகள்
ப்ரித்வி ஷா -18 பந்துகள்
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - 19 பந்துகள்
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம்;
ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் - 15 பந்துகள்
அபிஷேக் சர்மா - 16 பந்துகள்
டிராவிஸ் ஹெட் - 16 பந்துகள்