அவர் உண்மையிலேயே ஒரு மேட்ச் வின்னர்...நடராஜனை பாராட்டிய புவனேஷ்வர் குமார்
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.;
டெல்லி,
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் அடித்தார்.
ஐதராபாத் தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 4 ஓவர்களில் 1 மெய்டனுடன் 19 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் ஐதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இப்படி பெரிய இலக்கை கட்டுப்படுத்தும் போது நாங்கள் அதிக ரன்களை வழங்குவோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் எங்களுடைய திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறோம். அதனால் கொஞ்ச நேரத்தில் விக்கெட்டுகள் எடுக்க துவங்கியதும் போட்டி சரியான வழியில் செல்ல துவங்கும்.
நடராஜன் தன்னுடைய யார்கர்களில் எந்தளவுக்கு சிறப்பானவர் என்பதை நாங்கள் அறிவோம். கடினமாக உழைக்கக்கூடிய அவர் அமைதியான பையன். அவர் உண்மையான மேட்ச் வின்னர். பல வருடங்களுக்குப் பின் எங்களுடைய அணியின் பேட்டிங் இந்த வருடம் க்ளிக் ஆகியுள்ளது. அதனால் பவுலர்கள் நாங்கள் கொஞ்சம் அடி வாங்குவதற்கு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் பேட்டிங் நன்றாக வேலை செய்கிறது.
வலைப்பயிற்சியில் எங்களுடைய பந்துகள் எங்கே பறக்கிறது என்பது தெரியாது. இருப்பினும் ஹெட் - அபிஷேக்கிற்கு எதிராக பந்து வீசுவது நல்ல பயிற்சியாகும். இப்போதும் பவுலிங் தான் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்கும். பேட்டிங் உங்களுக்கு ஸ்பான்சர்ஷிப்பை வென்று கொடுக்கும். ஆனால் பவுலிங் தான் உங்களுக்கு சாம்பியன்ஷிப்பை வென்று கொடுக்கும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியாது. ஆனால் அவர்கள் சொன்னது அற்புதமானது. இவ்வாறு அவர் கூறினார்.