ஜாம்பவானாக உருவெடுக்க கூடிய அனைத்து குணங்களும் அவரிடம் உள்ளன - இந்திய வீரரை பாராட்டிய ஜாகீர் கான்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-03-08 08:11 GMT

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தின் மூலம் வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக இந்த போட்டியின் முதல் நாளில் இந்திய அணிக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி 5 பவுண்டரி 3 சிக்சருடன் 57 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் சுனில் கவாஸ்கருக்கு பின் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற அவர் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இந்நிலையில் வருங்காலங்களில் ஜாம்பவானாக உருவெடுப்பதற்கான அனைத்து குணங்களும் ஜெய்ஸ்வாலுக்கு இருப்பதாக முன்னாள் வீரர் ஜாகீர் கான் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;-

"யசஸ்வி ஜெய்ஸ்வால் இன்னிங்ஸ் தொடங்கும்போது சற்று கவனத்துடன் இருந்தார். ஆனால் ஸ்பின்னர்கள் வந்த பிறகு அதிரடியாக விளையாடினார். நீங்கள் நல்ல பார்மில் இருக்கும்போது அவசரமான ஷாட்டை அடித்து உங்களுடைய விக்கெட்டை கொடுக்கக் கூடாது என்ற மனநிலையுடன் இருக்க வேண்டும். அதை ஜெய்ஸ்வால் காண்பித்தார்.

அவருடைய பேட்டிங்கில் ரன்கள் எடுப்பதற்கான ஆர்வத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது போன்ற பெரிய கடினமான தொடர்கள் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக வராது. இருப்பினும் அது போன்ற தொடரை தன்னுடைய நல்ல பார்மை வைத்து ஜெய்ஸ்வால் பெரியளவில் பயன்படுத்தியுள்ளார். வீரர்களை விளையாட்டின் ஜாம்பவான்களாக மாற்றும் அனைத்து குணங்களையும் ஜெய்ஸ்வால் கொண்டுள்ளார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்