ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்; கேப்டன் பதவிக்கு சூர்யகுமார் யாதவ் - இளம் வீரர் இடையே போட்டி..? - வெளியான புதிய தகவல்...!

இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2023-11-10 04:31 GMT

கோப்புப்படம்

மும்பை,

இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் வரும் 23ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2வது ஆட்டம் 26ம் தேதி திருவனந்தபுரத்திலும், 3வது ஆட்டம் 28ம் தேதி கவுகாத்தியிலும், 4வது டி20 ஆட்டம் டிசம்பர் 1ம் தேதி நாக்பூரிலும், 5வது டி20 ஆட்டம் டிசம்பர் 3ம் தேதி ஐதராபாத்திலும் நடைபெற உள்ளது.

இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறினார். அவரது காயம் முழுமையாக குணமடைவதற்கும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் பொருட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என கேள்வி எழும்பி உள்ளது.

தற்போது கேப்டன் பதவிக்கு சூர்யகுமார் யாதவ் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதேவேளையில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு தங்கப்பதக்கம் பெற்று தந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்