உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய பின்னர் ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!

உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் இடறி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.

Update: 2023-11-05 07:12 GMT

image courtesy; AFP 

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இதில் இந்தியா முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது. இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அவரது காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கடந்த 2 வாரங்களாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அரையிறுதி ஆட்டத்திலும் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் தற்போது முதல் முறையாக தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பக்கத்தில் பாண்ட்யா ஒரு நெகிழ்ச்சியான கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், ' உலகக்கோப்பையின் எஞ்சிய ஆட்டங்களை நான் இழக்க நேரிடும் என்ற உண்மையை ஜீரணிக்க கடினமாக உள்ளது. இருந்தாலும் இனிவரும் ஒவ்வொரு ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் இந்திய அணியினை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக அணியுடன் துணை நிற்பேன். நான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்' என பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்