குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் நெகிழ்ச்சி பதிவு!
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியுள்ளது.
மும்பை,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதனிடையே குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்நிலையில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டனாக பொறுப்பேற்றது குறித்து சுப்மன் கில் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில்,
'குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பெருமையடைகிறேன். இவ்வளவு அருமையான அணியை வழிநடத்துவதற்கு என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு குஜராத் அணியின் நிர்வாகத்திற்கு நன்றி கூறுகிறேன். இதனை மறக்க முடியாத ஒன்றாக மாற்றுவோம்' என பதிவிட்டுள்ளார்.