இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - கவாஸ்கர் கோரிக்கை

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Update: 2024-07-07 11:04 GMT

Image Courtesy: @BCCI

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வெற்றியுடன் விடைபெற்றார்.

ஒரு வீரராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராகவும் என்.சி.ஏ. இயக்குனராகவும் பணியாற்றினார். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டுக்கு அதிக அளவில் பங்காற்றியுள்ள ராகுல் டிராவிட்டுக்கு பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கவுரவிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். சிறந்த வீரரான அவர் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக இந்தியாவிற்கு டெஸ்ட் தொடரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

தேசிய கிரிக்கெட் தலைவராகவும், சீனியர் அணியின் பயிற்சியாளராகவும் இருந்த அவர் ஒரு அற்புதமான திறமைசாலி. டிராவிட்டின் சாதனைகள் அனைத்து கட்சி பேதமின்றி, சாதி, மத, சமூகங்களை கடந்து மகிழ்ச்சியை கொடுத்துள்ளன.

அவருடைய சேவை நாட்டுக்கு மகிழ்ச்சியை கொண்டு வந்தது. எனவே நாட்டின் உயரிய அந்த விருதுக்கு அவர் தகுதியானவர். அனைவரும் வாருங்கள். இந்தியாவின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரை அரசு அங்கீகரிக்குமாறு கேட்டுக் கொள்வதில் என்னோடு இணைந்து கொள்ளுங்கள். பாரத ரத்னா ராகுல் டிராவிட் என்று சொல்வது நன்றாக இருக்கிறது அல்லவா?. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்