துலீப் கோப்பை தொடரில் சிறந்த கேப்டன் திறனை காட்டியது இவர்தான் - டபிள்யூ வி ராமன்

இந்திய ஏ - இந்தியா பி அணிக்கு இடையிலான போட்டியில் டபிள்யூவி ராமன் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Update: 2024-09-08 10:38 GMT

image courtesy: PTI

பெங்களூரு,

உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பையில் இந்திய அணியின் புதிய கேப்டன்களை அடையாளம் காணும் பணியில் நான்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில், இந்திய பி அணியின் கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும், இந்திய சி அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டும், இந்திய டி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்த நான்கு கேப்டன்களுமே பெரிய அளவில் தன்னுடைய கவனத்தை ஈர்க்கவில்லை என்றும் அணியில் சாதாரண வீரராக விளையாடிய ரிஷப் பண்ட்தான் கேப்டனாக இல்லாமலும் தனது பணியை சிறப்பாக செய்வதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யூ வி ராமன் பாராட்டியுள்ளார்.

இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கு இடையிலான போட்டியில் டபிள்யூ வி ராமன் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது இந்திய பி அணியில் இடம்பெற்று இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட், அந்த அணியின் பவுலரான நவதீப் சைனி உடன் அவ்வப்போது எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி செயல்பட்ட நவதீப் சைனிக்கு மூன்று விக்கெட்டுகள் முதல் இன்னிங்சில் கிடைத்தது. குறிப்பாக அதிரடி வீரர் துருவ் ஜூரலுக்கு பந்து வீசும் போது ரிஷப் பண்ட், நவதீப் சைனியிடம் கிராஸ் சீம் வகையிலான பந்தை பயன்படுத்துமாறு கூறினார். அதேபோல் சைனி பந்து வீச ஜூரல் விக்கெட் கிடைத்தது.

அப்போது வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டபிள்யூ வி ராமன், "இந்த அணியில் யார் கேப்டன் என்பதில் முக்கியமில்லை. பண்ட் களத்தில் இருக்கும்போது ஒரு தலைவராக செயல்படுகிறார். ஒவ்வொரு ஓவர் இடைவெளியின் போதும் ரிஷப் பண்ட், பவுலர்களை அழைத்து சில அறிவுரைகளை கூறியிருக்கிறார். சைனிக்கு அவர் சில அறிவுரைகளை வழங்கினார். அது தற்போது சிறப்பாக செயல்பட்டு சைனிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்து இருக்கிறது. இதனால் பண்ட் தலைமை பண்பு சிறப்பாக இருக்கிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்