3 போட்டிகளில் குறைந்த ரன்கள் அடித்தார் என்பதற்காக...- விராட் கோலிக்கு கவாஸ்கர் ஆதரவு

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தடுமாறுவதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-13 15:17 GMT

மும்பை,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள முன்னாள் சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனையடுத்து 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது மட்டுமின்றி சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதிபெற்று அசத்தியது.

முன்னதாக இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி சுமாராக விளையாடி வருவது ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் 3-வது இடத்தில் களமிறங்கிய அவர் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்து 2 தொடர்நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். ஆனால் கடந்த ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆரஞ்சு தொப்பியை வென்றதால் இம்முறை அவரை இந்திய அணி நிர்வாகம் ஓப்பனிங்கில் களமிறக்கியுள்ளது.

அந்த வாய்ப்பில் 1, 4, 0 என இதுவரை ஒற்றை ரன்களில் விராட் கோலி அவுட்டானதால் மீண்டும் 3வது இடத்தில் களமிறக்குமாறு கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. ஏனெனில் டி20 உலகக்கோப்பையில் 3வது இடத்தை தவிர்த்து விளையாடிய 4 இன்னிங்ஸில் அவர் 3 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி தடுமாறுவதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது தடுமாறும் விராட் கோலி சூப்பர் 8, செமி பைனல் போன்ற முக்கிய போட்டிகளில் அசத்துவார் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே அனைவரும் விமர்சிக்காமல் ஆதரவு கொடுத்தாலே போதும் என்று தெரிவிக்கும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"நாட்டுக்காக விளையாடும் எந்த வீரருக்கும் வெற்றி பெற வேண்டும் என்பதே மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். அதை நீண்ட காலமாக செய்து வரும் விராட் கோலி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் நாம் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கிறோம். இன்னும் சூப்பர் 8, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் வர உள்ளன. எனவே விராட் கோலி தற்போதைக்கு அமைதியாக இருந்து தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் நீங்கள் நல்ல பந்துகளை சந்திப்பீர்கள். மற்றொரு நாள் அதே பந்து ஒயிட் அல்லது பவுண்டரிக்கு செல்லும். எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் வருவார் என்று நம்புவோம்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்