பவுலர்களுக்கு சாதகமாக உள்ள அந்த விதிமுறையை மாற்ற வேண்டும் - ஐ.சி.சி.க்கு கவாஸ்கர் கோரிக்கை

பவுலர்கள் ஓவர்களுக்கு இடையே பவுண்டரி எல்லைக்கு சென்று தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Update: 2024-07-18 12:28 GMT

மும்பை,

கிரிக்கெட் போட்டிகளில் காலத்திற்கேற்ப பல விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும் அந்த விதிமுறைகள் பல சமயங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகும். எடுத்துக்காட்டாக ஐ.பி.எல். தொடரில் உள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறையால் பல திறமையான ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்பபடுவதாக விமர்சனங்கள் உள்ளன. அதனால் நிறைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைப்பது வழக்கமாகும்.

இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அடிக்கடி பவுலர்கள் ஓவர்களுக்கு இடையே பவுண்டரி எல்லைக்கு சென்று தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பீல்டிங் செய்கிறேன் என்ற பெயரில் அடிக்கடி பவுலர்கள் பவுண்டரி எல்லைக்கு சென்று தண்ணீர் குடிப்பதாக அவர் கூறியுள்ளார். அப்படி பவுண்டரி எல்லைக்கு அடிக்கடி குடித்தால் பின்னர் தண்ணீர் இடைவெளி எதற்கு? என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தண்ணீர் இடைவெளி வரை காத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் மனிதர்கள் இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே ரிசர்வ் வீரர்கள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஓவர்களுக்கு இடையே விதிமுறையை மீறி சென்று பவுலர்களுக்கு தண்ணீர் கொடுப்பதை ஐ.சி.சி. நிறுத்த வேண்டும் என்றும் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. "கிரிக்கெட்டில் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் ஓவரை முடித்து விட்டு பீல்டிங் செய்ய செல்லும்போது பவுண்டரி எல்லையில் புத்துணர்ச்சியூட்டும் வகையில் தண்ணீர் அருந்துவது அதிகரித்து விட்டது. பவுலர்கள் 6 பந்துகள் வீசி முடித்ததும் பானத்தை குடிக்க சென்றால் பின்னர் எதற்காக தண்ணீர் இடைவேளை விட வேண்டும்? இந்த நேரத்தில் ஓவர் முடிந்த பின்போ அல்லது ஒரு ஓவரில் 4 டபுள் ரன்கள் ஓடிய பின்போ பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் குடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கிரிக்கெட் என்பது ஸ்டாமினாவை பொறுத்த விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் ஒவ்வொரு மணி நேரமும் விளையாடிய பின் எதிரணி கேப்டன் மற்றும் நடுவரின் அனுமதியுடன் மட்டுமே பவுலர்கள் பானங்கள் அருந்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட பழைய விதிமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதேபோல ரிசர்வ் வீரர்கள் ஓவர்களுக்கு இடையே களத்திற்குள் சென்று தங்களுடைய வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்காதவாறு நடுவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்