சூதாட்ட புகார்; தற்கொலைக்கு முயன்ற முகமது ஷமி...நண்பர் கூறிய அதிர்ச்சி தகவல்
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
மும்பை,
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஆடி வருகிறார். மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வரும் ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது. வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கோரி விவாகரத்து கோரியிருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கிக்கொண்டு ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஹசின் ஜஹான் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதையடுத்து நடைபெற்ற போலீஸ் விசாரணையில் முகமது ஷமி சூதாட்டத்தில் ஈடுபடவில்லை என தெரியவந்தது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த சமயத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரது நண்பர் உமேஷ் குமார் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் உமேஷ் குமார் கூறியதாவது, அந்த சமயத்தில் முகமது ஷமி என்னுடன் என் வீட்டில் வசித்து வந்தார். அவர் மீது சூதாட்ட புகாரை அவரது முன்னாள் மனைவி கூறிய போது அவர் உடைந்துவிட்டார். 'என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் என் நாட்டிற்கு துரோகம் செய்கிறேன் என்ற குற்றசாட்டை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.
ஒருநாள் அதிகாலை 4 மணி அளவில், நாங்கள் வசித்த 19வது மாடி பால்கனியில் இருந்து முகமது ஷமி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்தார். அந்த இரவு ஷமியின் நீண்ட இரவாக இருந்தது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணை அறிக்கை வெளிவந்த போது ஷமி மிகவும் சந்தோஷப்பட்டார். உலக கோப்பையை வென்றபோது கூட ஷமி இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.