முதல் டெஸ்ட்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு...பாகிஸ்தான் 271 ரன்களுக்கு ஆல் அவுட்..!

ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Update: 2023-12-16 07:23 GMT

Image Courtesy: @ICC

பெர்த்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 487 குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 164 ரன்களும், மிட்செல் மார்ஷ் 90 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 53 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் 38 ரன்களிலும், குர்ரம் ஷாஜாத் 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இமாம்-உல்-ஹக் அரைசதம் அடித்தார். மறுமுனையில் குர்ரம் ஷாஜாத் 7 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய பாபர் ஆசம் 21 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து 62 ரன்கள் எடுத்த நிலையில் இமாம் உல் ஹக்கும் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 101.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் இமாம் உல் ஹக் 62 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் லயன் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி 216 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்