ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்... ஆக்ரோஷ ஆட்டத்தில் ஸ்டோக்ஸ் - உச்சகட்ட பரபரப்பில் ஆஷஸ்
ஜானி பேர்ஸ்டோவ் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் ஆன நிலையில் ஸ்டோக்ஸ் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.;
லண்டன்,
உலகின் மிகவும் பிரபலமான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஷஸ். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரே ஆஷஸ் என அழைக்கப்படுகிறது.
இதனிடையே, நடப்பு ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5 டெஸ்ட்கள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், 2வது ஆஷஸ் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து வெற்றிபெற ஆஸ்திரேலியா 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
டக்கெட் 50 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 29 ரன்னிலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 257 ரன்கள் தேவைப்பட்டது.
2வது ஆஷஸ் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கியது முதல் டக்கெட், ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினர். டக்கெட் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த ஜானி பெஸ்டோ சர்ச்சைக்குரிய வகையில் 10 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஜானி பேர்ஸ்டோவ் பந்தை விளாச முயற்சித்தபோது அது பேட்டிங் படாமல் கீப்பர் வசம் சென்றது. இதையடுத்து சில வினாடிகள் களத்தில் இருந்த ஜானி பேர்ஸ்டோ கிரீசை தாண்டி நடந்து சென்றார்.
அப்போது, கீப்பர் ஹெரி பந்தை வீசினார். அது ஸ்டம்பில் பட்டது. இதன் மூலம் பேர்ஸ்டோவ் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார். இந்த ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பேர்ஸ்டோவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்டை தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பேர்ஸ்டோவ் அவுட் ஆகும்போது ஸ்டோக்ஸ் 126 பந்துகளில் 62 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவர் அவுட் ஆன உடன் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த 21 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். ஸ்டோக்ஸ் ஒரே ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்கள் விளாசினார். அவர் 142 பந்துகளில் சதம் விளாசினார்.
தற்போதைய நிலவரப்படி, இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டோக்ஸ் 185 பந்துகளில் 147 ரன்களுடனும், ஸ்டூவட் பிராட் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 80 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 4 விக்கெட் தேவை. ஆட்டத்தில் கடைசி நாள் உணவு இடைவேளை முடித்து ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஆஷிஸ் டெஸ்ட் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.