இந்த வீரர்கள் மனதுக்குள் உங்களை திட்ட மாட்டார்களா? தனது மனைவியின் கிண்டல் குறித்து அஸ்வின்

இளம் வீரராக இருந்தபோது தாமும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று சிந்தித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

Update: 2024-09-24 13:23 GMT

சென்னை,

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் வங்காளதேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 144-6 என இந்தியா தடுமாறிய போது 113 ரன்கள் குவித்து காப்பாற்றிய அவர், 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அதனால் 38 வயதில் ஒரே போட்டியில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த வீரராக அஸ்வின் உலக சாதனையும் படைத்தார். அந்த வகையில் சிறப்பாக விளையாடும் அவர் ஓய்வு பெறுவதற்குள் அனில் கும்ப்ளேவின் சாதனையை உடைப்பாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் 2024 துலீப் கோப்பையில் அசத்திய இளம் ஆப் ஸ்பின்னர்கள் 'இவர் எப்போது ஓய்வு பெறுவார் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே விளையாடுகிறார்கள்" என தம்முடைய மனைவி கிண்டலடித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

உண்மையில் தாமும் அது போல உணர ஆரம்பித்து விட்டதாக அஸ்வின் கூறியுள்ளார். எனவே இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு:-

"நாங்கள் நேற்று முன்தினம் துலீப் கோப்பையின் சில ஹைலைட் வீடியோக்களை பார்த்தோம். அப்போது இந்த ஆப் ஸ்பின்னர்கள் தங்களது மனதுக்குள் உங்களை திட்ட மாட்டார்களா? என்று என்னுடைய மனைவி சொன்னார். கண்டிப்பாக அந்த இளம் வீரர்கள் அப்படி சிந்திப்பார்கள். குறிப்பாக எப்போது அஸ்வின் வெளியேறுவார் நமக்கு இடம் கிடைக்கும்? எப்போது இந்திய அணிக்குள் சென்று நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்? என்று அவர்கள் நினைப்பார்கள். உண்மையில் நானும் கொஞ்சம் அவ்வாறு உணர்கிறேன். ஆம் நான் அந்த இடத்தில்தான் இருக்கிறேன்.

சொல்லப்போனால் இளம் வீரர்களாக இருந்தபோது நாங்களும் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று சிந்தித்திருக்கிறோம். அதை திரும்பிப் பார்க்கும்போது அது எனக்கு நிதர்சனத்தை காட்டுகிறது. நீங்கள் நிறைய வருடங்கள் விளையாடி விட்டீர்கள் என்பதை அது உணர்த்துகிறது. அவர்களுடைய வயது குறைந்து இருக்கிறது. திடீரென என்னுடைய வயதை பார்க்கும்போது 38 ஆக உள்ளது. ரோகித் சர்மாவின் பிறந்த நாளன்று நாம் இருவரும் சில நாட்கள் ஒரே வயதுடன் இருப்போம் என்று அவரிடம் சொல்வேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்