பிலிப் சால்ட் அதிரடி: பெங்களூருவை எளிதில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றி...!

பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றிபெற்றது.

Update: 2023-05-06 17:31 GMT

டெல்லி,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 50வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டுபிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். இரு வீரர்களும் சிறப்பான, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த நிலையில் டுபிளசிஸ் அவுட் ஆனார். அடுத்துவந்த மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்காமல் (0) முதல் பந்திலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த லுமுருடன் ஜோடி சேர்ந்த கோலி சிறப்பாக ஆடினார். கோலி 55 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் லுமுர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லுமுர் 29 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 54 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் பெங்களூரு 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் மிச்சேல் மார்ஷ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் களமிறங்கினர். 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த வார்னர் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து வந்த மிச்சேல் மார்ஷ் 26 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரூசோவ் உடன் ஜோடி சேர்ந்த பிலிப் சால்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளும், சிக்சர்களையும் விளாசினார். 26 பந்துகளில் சால்ட் அரைசதம் கடந்தார். அவர் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உள்பட 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில், 16.4 ஓவரில் டெல்லி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றிபெற்றது. டெல்லி அணியின் ரூசவ் 22 பந்துகளில் 35 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்