டி.என்.பி.எல்: திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் அபார வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.
சேலம்,
8வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் சென்ற திருப்பூர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ், ஜெகதீசன் களமிறங்கினர். சந்தோஷ் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த கேப்டன் அபராஜித் 9 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரதோஷ் தொடக்க வீரர் ஜெகதீசனுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜெகதீசன் 36 ரன்னில் அவுட் ஆன நிலையில் பிரதோஷ் அரைசதம் கடந்தார். இறுதியில் சேப்பாக் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய பிரதோஷ் 46 பந்துகளில் 67 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். திருப்பூர் தரப்பில் முகமது அலி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணியின் தொடக்க வீரர்களாக ராதாகிருஷ்ணன், துஷார் களமிறங்கினர். ராதாகிருஷ்ணன் 15 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் துஷார் 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த அமித் 14 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கணேஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறின. கடைசி வரை போராடிய கணேஷ் 35 பந்துகளில் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் திருப்பூரை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, நடப்பு டி.என்.பி.எல். தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.