வெற்றி கோப்பையுடன் ஓய்வு பெற்ற சென்னை வீரர் ராயுடு..! பரிசளிப்பு விழாவில் கவுரவித்த தோனி..!

இறுதிப்போட்டியில் மிடில் ஆர்டரில் களம் கண்ட அம்பத்தி ராயுடு, 8 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Update: 2023-05-30 08:43 GMT

அகமதாபாத்,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. குஜராத் பேட்டிங்கில், சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.

பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்தது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட ெடன்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது.சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில் இந்த போட்டியுடன் சென்னை வீரர் ராயுடு ஐபிலஎல்லில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.

இறுதிப் போட்டிக்கு முன்பு அவர் டுவிட்டர் பக்கத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றவுள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.மும்பை சிஎஸ்கே என இரண்டு மிகப்பெரிய அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள்,11 பிளே ஆப், 8 இறுதிப் போட்டி, ஐந்து கோப்பை, ஆறாவது கோப்பை இறுதிப் போட்டியில் வெல்வேன் என நம்புகிறேன் என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கோப்பையுடன் அவர் ஐபிஎல்லில் இருந்து அவர் ஒய்வு பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் மிடில் ஆர்டரில் களம் கண்ட அம்பத்தி ராயுடு, 8 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். குறிப்பாக மோகித் சர்மா வீசிய ஆட்டத்தின் 13-வது ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் பறக்க விட்டுசென்னை அணி வெற்றிக்கு உதவினார்

சென்னை அணி வெற்றி பெற்றதும் பரிசளிப்பு விழாவில் அம்பத்தி ராயுடுவை அணி சார்பில் கோப்பையை வாங்க வைத்து கேப்டன் தோனி கவுரவித்தார்.

மும்பை சார்பில் மூன்று கோப்பைகள் சென்னை சார்பில் மூன்று கோப்பைகள் என மொத்தம் ஆறு முறை ஐபிஎல் கோப்பையை வென்றவர் 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அம்பத்தி ராயுடு 4,329 ரன்களை விளாசி இருக்கிறார். இதில் ஒரு சதமும் 22 அரை சதம் அடங்கும்.

Tags:    

மேலும் செய்திகள்