ஒருநாள் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையில் மீண்டும் மாற்றம் ?

போட்டியின் தேதியை மாற்றுமாறு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Update: 2023-08-20 09:31 GMT

புதுடெல்லி,

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. அக்.5-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது.கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு முதலில் வெளியிடப்பட்ட அட்டவணையில் ஐசிசி பல மாற்றங்கள் செய்து புதிய அட்டவணை வெளியிட்டது

இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் அக்.15ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நவராத்திரி திருவிழா காரணமாக பின்னர் அக்.14ஆம் தேதி நடத்தப்படும் என்று தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி மட்டுமல்லாமல், 9 போட்டிகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உலகக்கோப்பை அட்டவணையில் மேலும் மாற்றம் வர வாய்ப்பு உள்ளது. ஐதராபாத்தில் அக்டோபர் 9ஆம் தேதி நியூசிலாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 10ஆம் ஐதராபாத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த இரு போட்டிகளையும் தேதி மாற்றம் செய்யுமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த நாட்களில் இரு போட்டிகளை நடத்துவது சவாலானது என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது கடினம் என்பதால் ஒரு போட்டியின் தேதியை மாற்றுமாறு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐயிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்