தோனியின் ஆட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை - நியூசிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்

டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனியின் ஆட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என சைமன் டவுல் விமர்சித்துள்ளார்.

Update: 2024-04-05 09:09 GMT

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி மற்றும் 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி தோல்வியை தழுவியது டெல்லி அணிக்கு எதிராக மட்டுமே. ஆனால் அந்த போட்டியில் தோல்வியை மறந்து தோனியின் ஆட்டத்தை சி.எஸ்.கே. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத தோனி டெல்லிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 ரன்கள் விளாசினார்.

குறிப்பாக கடைசி ஓவரில் 4, 6, 0, 4, 0, 6 என பவுண்டரிகளை பறக்க விட்டு 20 ரன்கள் அடித்தார் . அதனால் தோல்வியை பொருட்படுத்தாமல் தோனியின் ஆட்டத்தை சி.எஸ்.கே. ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர்.

இந்நிலையில் ரசிகர்கள் கொண்டாடினாலும் அப்போட்டியில் தோனியின் ஆட்டத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டவுல் விமர்சித்துள்ளார்.

அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "தோனியின் இன்னிங்ஸ் பற்றி நிறைய பாராட்டுகள் இருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் நிறைய பந்துகளை வீணடித்தார். அவர் ரன்கள் எடுக்காமல் நிறைய டாட் பந்துகளை எதிர்கொண்டார். அப்படி அவர் ரன் எடுக்காமல் தடுத்ததை பார்த்தது என்னால் நம்ப முடியவில்லை. எம்.எஸ். தோனி மகத்தானவர் என்பதை நான் அறிவேன்.

அவருடைய அந்த முடிவு மிகவும் சுமாரானது. அந்த ரன்கள் வேண்டாம் என்ற அவருடைய முடிவு மோசமானது. ஏனெனில் அப்போதும் நீங்கள் போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கிறீர்கள். அவர் நீண்ட காலம் கழித்து விளையாடுவதால் பார்மை மீட்டெடுக்கலாம் என்று சில கட்டத்தில் யோசித்திருக்கலாம். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அந்த சூழ்நிலையில் நடந்ததில் எனக்கு உடன்பாடில்லை. அவர் ரன்கள் எடுக்காதபோது எனது பார்வையில் அது சரியாக தெரியவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்