பெங்களூரு - சென்னை ஆட்டம்: மழையால் ரத்து செய்யப்பட்டால் எந்த அணிக்கு சாதகம்..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள பெங்களூரு - சென்னை ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தால் குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் சென்னை நிர்ணயிக்கும் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.
இந்நிலையில் ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த முக்கியமான ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளது. பெங்களூருவில் இந்த வாரத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தை விட இரவில் மழை அதிகமாக இருக்கிறது. பெங்களூருவில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இரவில் (இரவு 7 மணி முதல் இரவு 10.30 மணி வரை) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டால் அது சென்னை அணிக்கு சாதகமாக அமையும். பெங்களூரு அணி வெளியேற நேரிடும். ஏனெனில் சென்னை அணி ஏற்கனவே 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் கூடுதலாக 1 புள்ளி பெற்றால் அந்த அணி எந்த வித சிக்கலுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதேவேளை பெங்களூரு 1 புள்ளி பெற்றாலும் 13 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பெற்று வெளியேறும்.