சதமடித்து அசத்திய பென் ஸ்டோக்ஸ்: நெதர்லாந்து அணிக்கு 340 ரன்கள் வெற்றி இலக்கு..!!

நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

Update: 2023-11-08 12:23 GMT

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்துடன் மோதி வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்து அணியின் சார்பில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மலான் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோ 15 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் ஓரளவு தாக்குப் பிடித்தநிலையில் 28 ரன்களில் போல்ட் ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசதத்தை பதிவு செய்த டேவிட் மலான் 87 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஹேரி புரூக் 11 ரன்களும், ஜோஸ் பட்லர் 5 ரன்னும், மொயின் அலி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக பென் ஸ்டோக்சுடன், கிரிஸ் வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. அதிரடி காட்டிய பென் ஸ்டோக்ஸ் தனது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ரன்களை குவித்த இந்த ஜோடியில் பென் ஸ்டோக்ஸ் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கிரிஸ் வோக்ஸ் தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 51 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய டேவிட் வில்லி 6 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்ற பென் ஸ்டோக்ஸ் 84 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர் உள்பட 108 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.

இறுதியில் அடில் ரஷித் 1 ரன்னும், அட்கின்சன் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக பாஸ் லீ லீடே 3 விக்கெட்டுகளும், லோகன் வேன் பீக் மற்றும் ஆர்யன் டூட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்க உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்