இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர்...! ஜூலை மாதம் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்கள் அணியின் தலைமை தேர்வாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுதில்லி,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ பிப்ரவரி 2023 முதல் ஆண்கள் அணிக்கான தேர்வாளர்களின் தலைவரைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்து வருகிறது.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சேத்தன் சர்மா ராஜினாமா செய்ததால் அப்போதைய தேர்வுகுழு உறுப்பினர்களில் ஒருவரான ஷிவ் சுந்தர் தாஸ் தற்காலிகமாக தலைமை தேர்வர் பதவிக்கு தெர்ந்த்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது நிரந்தர தலைமை தேர்வாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம்" என கூறியுள்ளார். மேலும்,அவர் தலைமை தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30. ஜூலை 1 அன்று நேர்காணல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தலைமை தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் ஆடிய நாட்களில் சிறப்பாக ஆடி உள்ளார்.மேலும் அணி வெற்றி பெற முழு பங்களிப்பை அளிக்கும் வீரராக இருந்துள்ளார்.ஓய்விற்கு பிறகு வர்ணனையாளராக மாறினார்.
முன்பு தலைமை தேர்வாளர் குழுவில் இடம் பெற்றிருந்தார். இந்த முறை அவர் தலைமை தேர்வாளர் பதவியை பெறக்கூடும் என்று தெரிகிறது.
ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராக அகர்கர் இருந்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜூன் 30ஆம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.