ரிஷப் பண்ட் விளையாட தடை: பொறுப்பு கேப்டனை நியமித்தது டெல்லி அணி
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது
பெங்களுரூ,
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி நடந்த 56-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்கிறது.
டெல்லி அணி அடுத்த போட்டியில் நாளை பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக பண்ட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளைய போட்டியில் டெல்லி அணியை யார் வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் டெல்லி அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்சர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடுவார்கள்.