தொடரை வென்ற வங்காளதேசம்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.

Update: 2024-09-03 11:31 GMT

Image Courtesy: AFP 

துபாய்,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய வங்காளதேசம் அந்த தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்காளதேசம் சாதனை படைத்தது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்காளதேசம் வெற்றி பெற்ற பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா (68.52 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், நியூசிலாந்து (50.00 சதவீதம்) 3ம் இடத்திலும் தொடர்கின்றன.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற வங்காளதேசம் (45.83 சதவீதம்) 6ம் இடத்தில் இருந்து 4ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து (45.00 சதவீதம்) 5ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6ம் இடத்திலும், இலங்கை (33.33 சதவீதம்) 7ம் இடத்திலும் உள்ளன.

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் (19.05 சதவீதம்) 8ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) 9ம் இடத்திலும் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்