விராட் மற்றும் ரோகித்திடம் இருந்து பாபர் அதனை கற்றுக்கொள்ள வேண்டும் - ரஷீத் லத்தீப்

பாபர் அசாம் கேப்டனாக அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என ரஷீத் லத்தீப் கூறியுள்ளார்

Update: 2024-06-07 06:00 GMT

கராச்சி,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்  வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

அதில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தரமான வீரர்கள் இருந்த போதிலும் நேற்று கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் தோற்று தடுமாறி வருகிறது. மறுபுறம் 2021-ஐ தவிர்த்து மற்ற அனைத்து உலகக்கோப்பைகளிலும் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. அந்த வரிசையில் இம்முறை அமெரிக்க மண்ணில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும் கேப்டனாக அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதை ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"ஜூன் 9-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியின் மீது கவனம் இருக்கிறது. பாபர் அசாம் தற்போது அதிகப்படியான அழுத்தத்தின் கீழ் இருக்கிறார். ஏனெனில் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவதை விட இந்தியாவுக்கு எதிரான அந்தப் போட்டியில் அவர்கள் அசத்த வேண்டும். எனவே அவர் அழுத்தத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். அதை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் இருந்து அவர் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அழுத்தத்தை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தெரியும். ஒரு பேட்ஸ்மேனாக பாபர் அசாம் சிறந்தவர். ஆனால் கேப்டனாக அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்காக குல்தீப் யாதவ் இந்த உலகக் கோப்பை முழுவதும் பிட்டாக இருக்கும் பட்சத்தில் எந்த பேட்ஸ்மேனுக்கும் சவாலை கொடுப்பார். அவர் தான் இந்தியாவின் சிறந்த பவுலர். இந்தியாவின் வெற்றிக்கான சாவி. தற்போதைய பார்ம் மற்றும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் கண்டிப்பாக ஜூன் 9-ம் தேதி இந்தியா வெற்றிக்கான சாதகத்தை கொண்ட அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் ஐசிசி தொடர்களில் நன்றாக விளையாடக்கூடிய அணியாகும். ஆனால் 2021, 2022 ஆண்டுகளைப்போல தற்போது அவர்கள் சிறப்பாக தயாராகவில்லை. கடந்த ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின் கேப்டன்ஷிப், தேர்வு, வீரர்கள் போன்ற பலவற்றில் நிறைய பிரச்சினை நடந்துள்ளது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்