ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பங்கேற்கும் மேத்யூ வேட் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.

Update: 2024-03-16 01:56 GMT

கோப்புப்படம்

ஹோபர்ட்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இடக்கை பேட்ஸ்மேனான மேத்யூ வேட் வருகிற 21-ந் தேதி தொடங்கும் தாஸ்மானியா - மேற்கு ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஷெப்பீல்டு ஷீல்டு இறுதிப்போட்டியுடன் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து விடைபெற போவதாக அறிவித்துள்ளார்.

சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் வெள்ளை நிற பந்து போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் மேத்யூ வேட் கூறியுள்ளார். 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மேத்யூ வேட் அந்த ஆண்டு இறுதியில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கு பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட மேத்யூ வேட், ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிக்கும் நோக்குடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பங்கேற்கும் 36 வயதான மேத்யூ வேட் தொடக்கத்தில் சில ஆட்டங்களை தவற விடுவார் என்று தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்