இம்முறை அந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்பில்லை - ஹெய்டன் எச்சரிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.;
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக கடந்த 2020/21-ல் நடைபெற்ற தொடரில் அடிலெய்டு நகரில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இந்தியாவை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
ஆனால் இம்முறை அதே போன்ற வெற்றியை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எளிதாக பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார். குறிப்பாக இரவு நேரத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் சிக்கினால் ஆஸ்திரேலியா தோல்வியை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இம்முறை அடிலெய்டு நகரில் நடைபெறும் 2வது போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. அப்போட்டியில் இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலைகளில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும். அது போன்ற சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண் சாதகம் என்பது முற்றிலுமாக நீக்கப்படும். குறிப்பாக இரவு நேரத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் வந்தால் 130/4 என்ற வலுவான நிலையிலிருந்து 150/8 என்ற நிலைக்கு தள்ளப்படலாம். எனவே இயற்கையாக நீங்கள் அப்போட்டியில் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பே இல்லை" என்று கூறினார்.