ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ்க்கு கொரோனா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குகிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-08 20:34 GMT

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியா -வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு விதிமுறையை பின்பற்றி தனியறையில் தங்கும் அவர் தனி உடைமாற்று அறையில் பயன்படுத்துவார் என்றும் போட்டியின் போது சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்படுவார் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் சமீபத்தில் கொரோனா பாதிப்புடன் விளையாடினார்கள் என்பது நினைவுகூரத்தக்கது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டும். அந்த அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், இங்லிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் என்று அதிரடி வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.

அதேநேரத்தில் ரோமன் பவெல் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் தயாராகிறது. ஆந்த்ரே ரஸ்செல், நிகோலஸ் பூரன், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஜாசன் ஹோல்டர், பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் விளையாட இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 19 இருபது ஓவர் போட்டிகளில் 10-ல் வெஸ்ட்இண்டீசும், 9-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  

Tags:    

மேலும் செய்திகள்