ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; முன்னணி வீரர் காயம் - இலங்கைக்கு வந்த சிக்கல்...!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன.
கொழும்பு,
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
தீக்சனா ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் முடிவு வெளிவந்த பின்னரே அவர், நாளை (17-ம் தேதி) நடைபெறும் இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா? என்பது தெரியவரும்.
உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் ஏற்கனவே முன்னணி வீரர்களான வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லகிரு மதுஷங்கா, லகிரு குமரா ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது தீக்சனாவின் காயமும் இலங்கை அணியை கவலையடையச் செய்துள்ளது.