எனது சொந்த ஊரில் அஸ்வின் அந்த மகத்தான சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி - ரவீந்திர ஜடேஜா

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது.

Update: 2024-02-14 10:38 GMT

கோப்புப்படம்

ராஜ்கோட்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தது.

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது. 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (15-ந்தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் தனது 500வது விக்கெட்டை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த போட்டியிலேயே 500வது விக்கெட்டை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின், முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. எனவே அப்போட்டியில் தள்ளிப்போன 500வது விக்கெட்டை இப்போட்டியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய ஆப் ஸ்பின்னர் என்ற மாபெரும் வரலாற்றை அஸ்வின் படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் எனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் அஸ்வின் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்துவார் என்பதே விதி என ஜடேஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

அஸ்வினுடன் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்துவார்.

முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதை நிகழ்த்துவார் என நினைத்தேன். பரவாயில்லை எனது சொந்த ஊரான ராஜ்கோட்டில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க வேண்டும் என்பதே விதி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்