இந்திய அணியில் விளையாட அஸ்வின் தகுதியானவர் அல்ல - யுவராஜ் சிங் கருத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற வேண்டும் என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

Update: 2024-01-14 07:44 GMT

மும்பை,

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகமானார். 2011 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும், 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். அதனால் இந்திய அணியில் முன்னணி வீரராக வலம் வந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நிறைய விக்கெட்டுகளை எடுத்த அவர் தவிர்க்க முடியாத வீரராக உருவானார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தோனி கேப்டன்ஷிப் பதவியில் இருந்து விலகிய பின்னர் அஸ்வினுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒருசமயத்தில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அஸ்வினின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டாலும் 2021, 2022 டி20 உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவர் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.

தற்போது நிறைய இளம் வீரர்கள் வந்து விட்டதால் இனிமேலும் அவருக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காது என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட அஸ்வின் தகுதியற்றவர் என்று யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

அஸ்வின் மகத்தான பந்துவீச்சாளர். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அவர் தகுதியானவர் என்று நான் நினைக்கவில்லை. பந்து வீச்சில் அவர் நன்றாக செயல்படுவார். ஆனால் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அவரால் அணிக்கு என்ன செய்ய முடியும்?. இந்திய டெஸ்ட் அணியில் அவர் இருக்க வேண்டும். ஆனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் அவர் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று நான் கருதவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்