ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலிய அணி 100.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Update: 2023-06-29 13:58 GMT

image courtesy: England Cricket twitter

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் மொயீன் அலிக்கு பதிலாக ஜோஷ் டங்குவும், ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலன்டுக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க்கும் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர்.

ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த இவர்கள் ஸ்கோர் 73-ஐ எட்டிய போது பிரிந்தனர். கவாஜா 17 ரன்னில் அவுட்டானார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன் வந்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வார்னர் (66 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜோஷ் டங்குவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு லபுஸ்சேனுடன், துணை கேப்டன் ஸ்டீவன் சுமித் கூட்டணி போட்டார். இவரும் இங்கிலாந்தின் ஸ்விங் தாக்குதலை திறம்பட சமாளித்து ரன் சேகரித்தனர்.

அணியின் ஸ்கோர் 198-ஐ எட்டிய போது லபுஸ்சேன் 47 ரன்களில் வீழ்ந்தார். அவருக்கு பிறகு நுழைந்து அதிரடியில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் 77 ரன்கள் (73 பந்து, 14 பவுண்டரி) நொறுக்கினார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் (0) தாக்குப்பிடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 339 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அதன்பின், டிராவிஸ் ஹெட் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 100.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்