இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கர்வம் பிடித்தவர்களா? கபில்தேவ் விமர்சனத்துக்கு ஜடேஜா பதிலடி
தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை என ஜடேஜா தெரிவித்துள்ளார்.;
தரோபா,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சில தினங்களுக்கு முன்பு, 'இந்திய அணியில் வீரர்களுக்கு நிறைய பணம் கொட்டும் போது, கூடவே ஈகோவும், கர்வமும் வந்து விடுகிறது. அவர்கள், கிரிக்கெட்டில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள். சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். அவரிடம் ஆலோசனை கேட்பதில் உங்களுக்கு என்ன தயக்கம். அவர் 50 ஆண்டுகள் கிரிக்கெட்டிலேயே வாழ்ந்தவர். அவரிடம் பேசினால் புதுப்புது யோசனை கிடைக்கும்' என்று சரமாரியாக சாடி இருந்தார். ஆனால் எந்த வீரர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை.
கபில்தேவின் விமர்சனம் குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், 'கபில்தேவ் எப்போது இப்படி சொன்னார் என்பது தெரியவில்லை. இது போன்ற விஷயங்களை சமூக வலைதளத்தில் தேடிப் பார்ப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. முன்னாள் வீரர்கள் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தற்போதைய இந்திய அணியில் திமிர் போக்குடன் நடந்து கொள்ளும் வீரர்கள் யாரும் இல்லை.
அணியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது கிரிக்கெட்டை அனுபவித்து ரசித்து விளையாடுகிறார்கள். இதற்காக கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. அணிக்கு தங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இந்திய அணி தோற்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல வீரர்களை கொண்ட சிறந்தஅணி. நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அது தான் எங்களது முக்கிய இலக்கே தவிர தனிப்பட்ட விஷயங்களுக்கு இங்கு இடமில்லை' என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜடேஜா, 'வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில வீரர்களை களம் இறக்கி பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டாலும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை கேப்டனும், அணி நிர்வாகமும் ஏற்கனவே முடிவு செய்து விட்டது' என்றார்.