ரோகித், ஜடேஜா அசத்தல் சதம்... முதல் நாளில் இந்தியா 326 ரன்கள் குவிப்பு

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன முதல் இன்னிங்சிலேயே சர்பராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார்.

Update: 2024-02-15 11:43 GMT

image courtesy; twitter/@BCCI

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது .

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 10 ரன்களில் மார்க் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சுப்மன் கில், மார்க் வுட் பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து வந்த ரஜத் படிதாரும் 5 ரன்களில் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கை கோர்த்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி அணியை தலை நிமிர செய்தது.

சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா இந்த தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஜடேஜா அரை சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த பிறகும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜடேஜா சிறப்பாக விளையாடி சதத்தை நோக்கி முன்னேறினார்.

ரோகித்துக்கு பின் களமிறங்கிய அறிமுக வீரர் சர்பராஸ் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்து அசத்திய அவர் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டில் வெளியேறினார்.

சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். முதல் நாளில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், டாம் ஹார்ட்லி 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்