சிக்சர் மழை பொழிந்த ஆலிஸ் கேப்சி: டெல்லி அபார வெற்றி - புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம்..!

இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Update: 2023-03-20 17:28 GMT

image courtesy: Women's Premier League (WPL) twitter

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி உ.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அதிரடியாக ஆடிய பூஜா வஸ்த்ரகரால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. அவர் 19 பந்தில் 26 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். நிதான ஆட்டத்தை கடைப்பிடித்த ஹர்மன்பிரீத் 23 ரன்னில் அவுட் ஆனார். மேலும் இஸ்சி வாங்கி 23 ரன், அம்ஜோத் கவுர் 19 ரன் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 109 ரன்கள் எடுத்தது.

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 9 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஷபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் மெக் லேனிங் (32 ரன்கள்), சிக்சர் மழை பொழிந்த ஆலிஸ் கேப்சி (38 ரன்கள், 5 சிக்சர்கள், 1 பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை உறுதி செய்தனர்.

இதனால் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் மும்பையை பின்னுக்குத் தள்ளி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்