அகமதாபாத் டெஸ்ட்: 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 289/3...சுப்மன் கில் சதம் அடித்து அசத்தல்..!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது

Update: 2023-03-11 11:41 GMT

Image Courtesy: AFP

அகமதாபாத்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 167.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களுடனும், சுப்மன் கில் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தின் 3வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய கில்-ரோகித் இணை முதல் விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்திருந்த நிலையில் ரோகித் 35 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து புஜாரா களம் இறங்கினார். அவர் தனது பங்குக்கு 42 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

இதற்கிடையில் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். அவர் 235 பந்தில் 128 ரன் எடுத்திருந்த நிலையில் லயான் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

இதையடுத்து கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு மட்டுமின்றி ரன்களையும் சேர்த்தது. இன்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 289 ரன் எடுத்துள்ளது. இந்திய அணி இன்னும் 191 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

இந்திய அணி தரப்பில் கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 4ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்