பாகிஸ்தான் அணியின் மோசமான நிலைக்கு இந்த 5 பேர்தான் காரணம் - முன்னாள் வீரர் விமர்சனம்
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
லாகூர்,
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிராக தோல்வியும், கனடாவுக்கு எதிராக மட்டும் வெற்றியையும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவும் அயர்லாந்தும் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானதால் அமெரிக்காவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகள் உடன் அமெரிக்க அணி இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றுக்கு சென்று இருக்கிறது. இதனால் பாகிஸ்தானின் சூப்பர் 8 வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் லீக் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் குழு மனப்பான்மையை சுட்டி காட்டி முன்னாள் வீரர் அகமது சேஷாத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஐந்து வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான நிலையில் இருக்கிறது என வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது பற்றி அகமது சேஷாத் பேசுகையில், "கடந்த 4-5 ஆண்டுகளாக பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, பக்கர் ஜமான், முகமது ரிஸ்வான் மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கு அதிக கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், அணியில் ஒரு குழுவை உருவாக்கி அவர்கள் ஒருவரை ஒருவர் தற்காத்துக் கொள்கிறார்கள்.
'நாங்கள் எங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். ஆனால், நீங்கள் எதை கற்றுக் கொள்கிறீர்கள்? கனடா அணிக்கு எதிரான போட்டியில் நீங்கள் அதிக நெட் ரன் ரேட்டை பெற வேண்டும் என்பதால் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால், அந்தப் போட்டியில் ரிஸ்வான் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். பாபர் அசாமும் மெதுவாக விளையாடினார். அவர்களுடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் நாசமாக்கப்பட்டு இருக்கிறது.
அணியின் தலைமையை பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். உண்மையில் பாகிஸ்தான் அணியில் அப்படி ஒன்று இல்லவே இல்லை. கேப்டன் பாபர் அசாம் ஒரு சமூக வலைதள ராஜா. அவர் முன்னேறுவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், அவர் எதையும் வென்று கொடுக்கவில்லை. அணியில் இருக்கும் வீரர்களின் உடற் தகுதியும் சரியாக இல்லை. அணியில் அரசியல் செய்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் அதன் உச்சத்தில் இல்லை. அதன் சரிவை சந்தித்து வருகிறது. பாபர் அசாம் நட்பை வளர்ப்பதில் மட்டுமே சரியாக செயல்பட்டு வருகிறார்.
மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக வந்ததிலிருந்து இரண்டு மிகப்பெரிய தவறுகளை செய்தார். ஒன்று பாபர் அசாமை மீண்டும் கேப்டனாக நியமித்தது. இரண்டாவது வஹாப் ரியாஸை தேர்வுக் குழு தலைவராக நியமித்தது" என்று கூறினார்.