இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை உதாரணம் காட்டி பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசும் முன்னாள் வீரர்

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் முழு நேர சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாட உள்ளது.

Update: 2024-08-19 20:12 GMT

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான வங்காளதேச அணி ஷாண்டோ தலைமையிலும், பாகிஸ்தான் அணி ஷான் மசூத் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை ராவல்பிண்டியில் தொடங்குகிறது.

இந்த தொடருக்காக பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை திடீரென அணியில் இருந்து நீக்கி இருக்கிறது அணி நிர்வாகம். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி ஒரு முழு நேர சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த முடிவை பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளை உதாரணம் காட்டி பாகிஸ்தான் அணி நிர்வாகம் எடுத்த முடிவை விளாசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஜேசன் கில்லஸ்பி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் நாம் ஆஸ்திரேலிய மனநிலையை பற்றி பேச வேண்டி உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணி நாதன் லயன் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? நிச்சயமாக இல்லை. நமது பாகிஸ்தான் அணியில் அப்ரார் அகமது சுழற்பந்து வீச்சாளராக இடம் பெற்று இருந்தார். ஆனால், இப்போது அவரை நீக்கியதன் மூலம் அவரது தன்னம்பிக்கையை வெகுவாக உடைத்து இருக்கிறீர்கள்.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் காரணமாக அப்ரார் அகமதுவின் கிரிக்கெட் வாழ்க்கை பாழாக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடற் தகுதி மற்றும் ஆடுகளத்துக்கு வெளியே நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அவர் நீக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் அந்த பையனின் வாழ்க்கையை வீணடித்து விட்டீர்கள். பாகிஸ்தான் அணியையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறீர்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்