சொந்த மண்ணில் 100 விக்கெட் வீழ்த்திய 5-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் - உமேஷ் யாதவ் சாதனை

சொந்த மண்ணில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை உமேஷ் யாதவ் படைத்தார்.

Update: 2023-03-02 18:04 GMT

இந்தூர்,

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சில் சிக்கித்தவித்த இந்திய அணி, 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 47 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பவுலர்கள் அஸ்வின், உமேஷ் யாதவ் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.

வெறும் 11 ரன்கள் இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி, எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

இன்றைய போட்டியின் மூலம் சொந்த மண்ணில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை உமேஷ் யாதவ் படைத்தார். இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. புஜாரா நிதானமாக ஆடி அரைசதத்தைக் கடந்தார்.

இருப்பினும் நாதன் லயோன் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்திய அணி 163 ரன்களில் சுருண்டது. அதோடு இன்றைய நாள் ஆட்டமும் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்கள் எஞ்சியிருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்