வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இலங்கை
வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
சட்டோகிராம்,
வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது .முதல் இன்னிங்சில் இலங்கை 531 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி இலங்கையின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இலங்கை இந்த போட்டியில் தற்போது வரை 455 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நாளை 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.