2வது டெஸ்ட் போட்டி; டேன் பீட் அபார பந்துவீச்சு - முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 211 ரன்களில் ஆல் அவுட்
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அபாரமாக பந்துவீசிய டேன் பீட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ஹாமில்டன்,
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 97.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 242 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ருவான் டி ஸ்வார்ட் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. நியூசிலாந்து தரப்பில் டெவான் கான்வே 0 ரன், டாம் லதாம் 40 ரன், வில்லியம்சன் 43 ரன், ரவீந்திரா 29 ரன், வில் யங் 36 ரன், டாம் ப்ளெண்டல் 4 ரன், பிலிப்ஸ் 4 ரன், ஹென்றி 10 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் 77.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து ஆல் அவுட் ஆன உடன் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது வரை 31 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.