2-வது டெஸ்ட்: ஜோ ரூட் அபார சதம்... முதல் நாளில் இங்கிலாந்து 358 ரன்கள் குவிப்பு

இலங்கை - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

Update: 2024-08-30 01:53 GMT

image courtesy: ICC

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ஆன டேனியல் லாரன்ஸ் 9 ரன்களிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஆலி போப் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

அதன்பின் களமிறங்கிய ஜோ ரூட் நிலைத்து விளையாடி அணியை முன்னெடுத்து சென்றார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த பென் டக்கெட் 40 ரன்களிலும், ஹாரி புரூக் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஜாமி சுமித் 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த சூழலில் 7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன், அட்கின்சன் கைகோர்த்தார். இவர்கள் அணியை சரிவில் இருந்து மீட்டு வலுவான நிலையை நோக்கி பயணிக்க வைத்தனர். அபாரமாக ஆடிய ஜோ ரூட் சதத்தை பூர்த்தி செய்தார். அணியின் எண்ணிக்கை 308-ஆக உயர்ந்தபோது ஜோ ரூட் 143 ரன்களில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் அட்கின்சின் தனது முதலாவது அரைசதத்தை அடித்தார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ, மிலன் ரத்னாயகே மற்றும் லஹிரு குமரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்