2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 385 ரன்களை இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்சில் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் சதமடித்து அசத்தினர்.

Update: 2024-07-21 15:03 GMT

image courtesy: twitter/@ICC

நாட்டிங்ஹாம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்கள் குவித்து 41 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 41 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 207 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. புரூக் 71 ரன்களுடனும், ஜோ ரூட் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் சதமடித்து அசத்தினர். இவர்கள் ஆட்டமிழந்த பின், களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 425 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 385 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இங்கிலாந்து.

இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்சில் ஜோ ரூட் 122 ரன்களும், ஹாரி புரூக் 109 ரன்களும், டக்கெட் 76 ரன்களும் மற்றும் ஒல்லி போப் 51 ரன்களும் குவித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்