ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை சாய்த்து மும்பை அணி 10–வது வெற்றி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிப்பு

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை சாய்த்து 10–வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது.

Update: 2017-05-13 21:00 GMT
கொல்கத்தா,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை சாய்த்து 10–வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது.

6 வீரர்கள் மாற்றம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 54–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்தித்தன.

கொல்கத்தா அணியில் கணுக்காலில் காயம் அடைந்த கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக டிரென்ட் பவுல்ட் இடம் பெற்றார். மும்பை அணியில் ஜோஸ்பட்லர் நாடு திரும்பி விட்டார். மலிங்கா, நிதிஷ் ராணா, பார்த்தீவ் பட்டேல், மெக்லெனஹான், ஜஸ்பிரித்சிங் பும்ரா, ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக அம்பத்தி ராயுடு, சவுரப் திவாரி, குணால் பாண்ட்யா, வினய்குமார், டிம் சவுதி, மிட்செல் ஜான்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

சிமோன்ஸ் ஏமாற்றம்

மழை காரணமாக சுமார் 30 நிமிடம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுரப் திவாரி, சிமோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். 3–வது ஓவரிலேயே சிமோன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் சுனில் நரினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, சவுரப் திவாரியுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) மும்பை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 21 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன் எடுத்த நிலையில் அங்கித் ராஜ்பூத் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களில் 69 ரன்னாக இருந்தது.

அம்பத்தி ராயுடு 63 ரன்கள்

அடுத்து அம்பத்தி ராயுடு, சவுரப் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் அடித்து ஆடியது. 13.1 ஓவர்களில் மும்பை அணி 100 ரன்னை எட்டியது. நிலைத்து நின்று ஆடிய சவுரப் திவாரி (52 ரன்கள், 43 பந்துகளில் 9 பவுண்டரியுடன்) பந்தை அருகில் அடித்த நிலையில்  ரன் எடுக்க ஓடி ரன்–அவுட் ஆனார்.

இதனை அடுத்து பொல்லார்ட், அம்பத்தி ராயுடுவுடன் இணைந்தார். அணியின் ஸ்கோர் 168 ரன்னாக உயர்ந்த போது அம்பத்தி ராயுடு (63 ரன்கள், 37 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன்) குல்தீப் பந்து வீச்சை முன்னால் இறங்கி அடித்து ஆட முயன்று விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் பொல்லார்ட் (13 ரன்கள், 11 பந்துகளில் ஒரு சிக்சருடன்)  டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் யூசுப் பதானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

மும்பை அணி வெற்றி

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னுடனும், குணால் பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், அங்கித் ராஜ்பூத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.  

பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 33 ரன்னும் (33 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), கிரான்ட்ஹோம் 29 ரன்னும் (16 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 26 ரன்னும் (14 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எடுத்தனர். மும்பை அணி தரப்பில் டிம் சவுதி, வினய்குமார், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஜான்சன், கரண்‌ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை அணி வீரர் அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருது பெற்றார்.  

அடுத்த சுற்றில் கொல்கத்தா

14–வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 10–வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. 14–வது ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா அணி சந்தித்த 6–வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தில் இருந்து 3–வது இடத்துக்கு சறுக்கினாலும் கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் 4–வது அணி எது என்பது இன்று நடைபெறும் புனே–பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவில் தெரிய வரும்.

மேலும் செய்திகள்