திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.70 கோடியில் கிரிப்பிரகார மண்டபம் இணை ஆணையர் குமரதுரை தகவல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.70 கோடி செலவில் கிரிப்பிரகார மண்டபம் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்தார்.;

Update: 2019-06-25 22:30 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில், சன்னதி தெருவில் கழிவுநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கழிவுநீர் குழாய் இணைப்பு தொட்டியின் வழியாக கழிவுநீர் வெளியேறியது. இதையடுத்து கோவில் சுகாதார பணியாளர்கள் கழிவுநீர் குழாயில் அடைப்புகளை அகற்றி சீரமைத்தனர்.

இந்த பணிகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் ஆலோசனையின்பேரில், கோவிலில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில் விடுதிகள், குளியலறைகள், கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோடையை முன்னிட்டு, கோவில் கிரிப்பிரகாரத்தில் பக்தரின் பங்களிப்புடன் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் ரூ.70 கோடி செலவில் கருங்கற்களால் ஆன மண்டபம் அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அதுவரையிலும் கோவில் கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் ரூ.3¼ கோடி செலவில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்படும்.

கோவில் வளாகத்தில் ரூ.33 கோடி செலவில் ‘யாத்ரி நிவாஸ்’ என்ற பெயரில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கப்பட உள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் அங்கபிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து செல்லும் வகையில், இரும்பிலான பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவிலில் சிறு வியாபாரிகளுக்கான ஏலம் முறை முடிவடைய உள்ளது. தொடர்ந்து அதனை கோவில் நிர்வாகமே நடத்தி, வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும். கோவிலில் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்