வைகுண்ட ஏகாதசி: பக்தர்களின் 'கோவிந்தா கோவிந்தா' முழக்கத்துடன் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு...
பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்னை,
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இன்று ராபத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார்.
பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சேலம் கோட்டை பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
மேலும் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சென்ராய பெருமாள் கோவில், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
மேலும் சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.