திருப்பரங்குன்றத்தில் நாளை வைகாசி விசாக திருவிழா

வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Update: 2024-05-21 04:41 GMT

மதுரை,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 8 நாட்கள் வசந்த மண்டபத்திற்கு உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். மேலும் அங்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த நிலையில், விழாவில் சிகர நிகழ்ச்சியான வைகாசி விசாக திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. முருகப்பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகத்தன்று தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கு அதிகாலை முதல் மாலை வரை குடம், குடமாக மகா பாலாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை சண்முகப்பெருமானுக்கு நடைபெறும் பாலாபிஷேகத்தை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

விசாக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து  குவிந்து வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்