மகுடத்துடன் ராமபிரான்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது, மகுடவர்த்தனபுரம் என்னும் முடிகொண்டான் என்ற ஊர். இது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் இருக்கிறது.
இங்கு ராமர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதில் அருள்பாலிக்கும் ராமபிரான், ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல் தலையில் மகுடத்துடன் காணப்படுகிறார். பரத்வாஜ முனிவர், தவம் செய்த இடம் இந்த முடிகொண்டான். மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் அனுமன் இல்லை. அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. ராமபிரான் இலங்கை செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையில் இருந்து திரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார். ராமரின் வருகையை பற்றி பரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சநேயர் அயோத்தி சென்று விட்டார் என்கிறது, ராமாயணம். இந்த நிலையில் தன் இடத்திற்கு வந்த ராமபிரானை, அரசராக பார்க்க வேண்டும் என்று ஆசைகொண்டார் பரத்வாஜர். அதன்படியே, இத்தல மூலவரான ராமபிரான் மகுடத்துடன் கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாக ஐதீகம்.